சாலைகளில் சில ஓட்டுநர்கள் தங்களது முறையற்ற வாகன ஓட்டுநர் திறனால் மற்றவர்களுக்குத் தொடர்ந்து பெரும் தலைவலியை ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்று. லேன் பற்றிய கவலை இன்றியும், எதிரில் வரும் வாகனங்களைப் பற்றிய பயம் இன்றியும் தாங்கள் நினைத்தபடியே வண்டி ஓட்டும் இத்தகைய நபர்களால் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஒற்றைப் பாதைச் சாலையில் எதிர் திசையில்  வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுநர்கள் பெரும் தொல்லையாக மாறுகின்றனர்.

இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் இதுபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், இந்த முறை எதிர் திசையில் காரை ஓட்டி வந்த ஓட்டுநருக்குத் தனது தலைக்கனத்திற்கான தகுந்த பாடம் கிடைத்துள்ளது. இதற்காக பெரிய அளவில் சண்டையோ அல்லது நடுரோட்டில் கூச்சலோ போடப்படவில்லை; மாறாக, ஒரு புத்திசாலி பைக்கர் தன் இடத்தை விட்டு நகராமல் உறுதியாக நின்றதன் மூலமும், போக்குவரத்து காவல்துறையின் அதிரடி நடவடிக்கை மூலமும் அந்த கார் ஓட்டுநருக்குச் சரியான சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவின்படி, ஒரு கார் தவறான பாதையில்  நுழைந்து வேகமாக முன்னேற முயல்கிறது. அந்த நேரத்தில், சரியான திசையில் தனது புல்லட் பைக்கில் வந்துகொண்டிருக்கிறார் ஒரு பைக்கர். தன் வழியில் வரும் காரைப் பார்த்துவிட்டு, பைக்கர் தன் பைக்கை ஓரமாக ஒதுக்கி வழிவிடுவார் என்று கார் ஓட்டுநர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், பைக்கோ அதைச் செய்ய மறுத்துவிட்டார். தனது புல்லட்டைச் சாலையின் நடுவே அப்படியே நிறுத்தி, ஸ்டாண்டைப் போட்டுவிட்டுத் தனது லேனிலேயே உறுதியாக நின்றார்.

இதனைத் தொடர்ந்து, காரும் பைக்கும் எதிரெதிரே நின்றுகொண்டிருக்க, அந்தத் தவறான பாதைக் காரால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது. இந்தச் சூழலை உன்னிப்பாகக் கவனித்த அங்கிருந்த போக்குவரத்துக் காவலர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தார். காவலர் வந்ததும் கார் ஓட்டுநரால் தனது தவறை நியாயப்படுத்த முடியவில்லை. இதனைக் கையாண்ட போக்குவரத்து காவலர், உடனடியாக அந்த காரின் புகைப்படத்தைப் பதிவு செய்து அதிரடியாக அபராதம்  விதித்தார். இந்தச் சிறிய சம்பவம் கார் ஓட்டுநருக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு பாடமாக மாறியுள்ளது.

இந்தச் சுவாரசியமான வீடியோவை புல்லட் ரைடர் வரன் தேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கார் ஓட்டுநரை கேலி செய்யும் வகையில், “இன்றைக்கு அந்த தம்பியின் அதிர்ஷ்டம் விடுப்பில் இருந்தது” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோ பதிவிடப்பட்ட வெறும் 22 மணி நேரத்திற்குள்ளாகவே சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது. பைக்கரின் இந்தத் தைரியமான மற்றும் புத்திசாலித்தனமான செயலையும், நெட்டிசன்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.