திமிங்கலத்தின் வயிற்று பகுதியில் உருவாகும் அதன் எச்சத்திற்கு அதிக விலை உண்டு. அம்பர்கிரிஸ் என்று அழைக்கப்படும் திமிங்கலத்தின் எச்சத்தை வைத்து தான் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி திமிங்கிலத்தின் எச்சத்தை வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சிலர் சட்டத்திற்கு புறம்பாக திமிங்கல எச்சத்தை கடத்தும் செயலில் ஈடுபடுவர்.

இந்நிலையில் திருச்சூர் நகரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஒரு காரை பரிசோதனை செய்தனர். அந்த காரில் ஐந்து கிலோ எடையுள்ள திமிங்கல எச்சம் இருந்துள்ளது.

இதனை கைப்பற்றிய போலீசார் அந்த காரில் வந்த மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராகுல், பாஜின், அருள்தாஸ் ஆகிய மூவரும் கள்ளச் சந்தையில் விற்பதற்காக கொண்டு சென்றதாக ஒப்புக்கொண்டனர்.

மேலும் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்கவும் திமிங்கலத்தின் எச்சத்தை வாங்குவோருக்கு அடையாளம் கூறவும் இந்த மூவரும் ஐயப்பனுக்கு மாலை அணிந்தவாறு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து 5 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.