நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20யில் கேப்டன் ஹர்திக் பாண்டியா பின்பற்றிய உத்திகளை பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சித்தார்.

ஒரு நாள் தொடரில் (IND Vs NZ) நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய போதிலும் டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு துறைகளில் சரியாக செயல்படாமல் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், முதல் டி20 போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா  யுக்திகளை தவறவிட்டார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கனேரியா கூறியதாவது, பந்து வீச்சாளர்களை மாற்றியமைத்து வெரைட்டி காட்டத் தவறிவிட்டார் பாண்டியா. அவருக்கு எந்த திட்டமும் இல்லை என்று தோன்றியது. ஹர்திக் பாண்டியா தனது பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதில் புத்திசாலித்தனமாக இல்லை. சிவம் மாவியை மிகவும் தாமதமாக பந்துவீச களமிறக்கினார். ஆரம்பத்திலேயே அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். தீபக் ஹூடாவை அதிகம் பயன்படுத்தி இருக்க வேண்டும். இங்குதான் ஹர்திக்கின் உத்திகள் குறைகின்றன. அவரிடம் உண்மையான திட்டங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை’ என்று  யூடியூப் சேனலில் விமர்சித்தார்.

மேலும் ஹர்திக்கின் பந்துவீச்சு முறை குறித்தும் கனேரியா கேள்வி எழுப்பினார். அதிக ரன்களை கொடுத்ததாகவும், சரியான லெங்த்தில் பந்தை வீசாததாகவும் அவர் விமர்சித்தார். முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, தொடரை இழப்பதை தவிர்க்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும்.