
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் வேலைகளில் தீவிரமடைந்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் முக்கிய மாற்றத்தைக் கண்டுள்ளது. அதாவது கட்சியின் முக்கிய தேர்தல் வியூக ஆலோசகராக இருந்த பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர், தற்போது தற்காலிகமாக தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவால் விஜயும், தவெக நிர்வாகிகளும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் தலைமையிலான IPAC குழு, கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜயின் வெற்றி வாய்ப்புகளை மதிப்பீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், பீகாரில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஜன் ஸ்வராஜ் என்ற தனிக்கட்சி வழியாக களத்தில் இறங்கவுள்ள பிரசாந்த் கிஷோர், அந்த மாநிலத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, “தாவெக ஆலோசகராக மீண்டும் பணியில் இணைய வேண்டுமா என்பதைக் குறித்து நவம்பர் மாதத்துக்குப் பிறகு முடிவு எடுப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் சமீபத்தில் மாநில செயற்குழு கூட்டத்தை நடத்தியது. இதில் விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும், விஜய் தலைமையிலேயே கூட்டணி அமைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்த மாதம் இரண்டாவது பெரிய மாநாட்டை நடத்த உள்ளனர். அதன்பின் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இத்தனை அரசியல் முன்மொழிவுகளுக்கு, பிரசாந்த் கிஷோரின் ஆலோசனை இல்லாமை கட்சியின் தேர்தல் வேலைகளில் எதிர்பாராத இடையூறுகளை ஏற்படுத்தலாம்.
தற்போது தவெக தேர்தல் மேலாண்மை பொது செயலாளராக ஆதவ் அர்ஜுனா மற்றும் இன்னொரு முக்கிய ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் தேர்தல் வியூகங்களில் பழக்கமுள்ளவர்கள் என்றாலும், பிரசாந்த் கிஷோர் அளவில் செல்வாக்கு மற்றும் தேர்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அதிலும் தற்போது இருக்கும் கடுமையான போட்டி சூழ்நிலையில், பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தகுதியான ஆலோசனைகள் தேவையாக உள்ளன.
திமுக – ஐபேக் மற்றும் ராபின் சர்மா குழு, அதிமுக – தனி ஆய்வு குழுக்கள், பாஜக – சொந்த ஆய்வுத் திட்டங்கள் என அனைத்துக் கட்சிகளும் மிக தீவிரமாக கள ஆய்வுகள் செய்து வியூகங்களை வகுத்து வருகிறார்கள். இந்த சூழலில் விஜய்க்கு ஆதரவை நிலைநாட்ட, தவெக மேலாளர்களின் சுயதிறமை மட்டும் போதுமா என்பதே தற்போதைய மிகப்பெரிய கேள்வி. பிரசாந்த் கிஷோர் மீண்டும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு தவெக ஆலோசகராக மீண்டும் இணைவாரா? அல்லது இது கட்சியின் வலிமையை பாதிக்கும் முக்கிய முன்னோட்டமாக மாறுமா என்பதைக் காலமே தீர்மானிக்க வேண்டியுள்ளது. மேலும் அடுத்து வரும் தேர்தலில் நடிகர் விஜய் கூட்டணி இல்லை தனித்துப் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ள நிலையில் திராவிட கட்சிகளுக்கு அவர் எந்த அளவுக்கு சவால் கொடுப்பார் என்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.