உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 5 வயது சிறுவனை கடத்தி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கான்பூர் மாவட்டத்தின் பர்ரா பகுதியில் நடந்தது. அங்கு வசிக்கும் மகான் சோன்கர் என்பவரின் 5 வயது மகன் ஆயுஷ் சோன்கர், வெள்ளிக்கிழமை மதியம் வீட்டிலிருந்து காணாமல் போனார்.
திடீரென சிறுவன் காணாமல் போனதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவரை அக்கம்பக்கங்களில் தீவிரமாக தேடினர். ஆனால் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு, சுற்றியுள்ள பகுதிகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவம் சக்சேனா என்பவர் சிறுவனை தன்னுடன் அழைத்துச் செல்வது தெளிவாக பதிவாகியிருந்தது.
இதையடுத்து, போலீசார் சிவமைத் தேடத் தொடங்கினர். மாலை நேரத்தில், பாண்டு நதிக்கரையில் 5 வயது ஆயுஷின் உடல் மீட்கப்பட்டது. சிறுவனின் உடலை அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டனர். இதனால் குடும்பம் முழுவதும் துயரத்தில் மூழ்கியது. போலீசார் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. குற்றம் சாட்டப்பட்ட சிவம் சக்சேனா, சிறுவனின் தாய் மம்தா மீது ஆசை கொண்ட நிலையில் பலமுறை அவரை நெருங்க முயன்றதாகவும் தெரியவந்தது.
ஆனால், மம்தா அவரை நிராகரித்ததால் இகோபமடைந்த சிவம் பழிவாங்கும் நோக்கில் சிறுவன் ஆயுஷை குறிவைத்து கடத்தி கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவத்திற்குப் பிறகு, சிவம் சக்சேனா தலைமறைவாகிவிட்டார். அவரைக் கைது செய்ய தேடுதல் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சிறுவனின் உறவினர் இது பற்றி கூறுகையில் என் சகோதரி மம்தா நண்பகல் வேளையில் குழந்தைகளை அழைத்து வரச் சென்றிருந்தார். அப்போது சிவம் வீட்டுக்கு வந்து, ஆயுஷுக்கு சாக்லேட் கொடுக்கிறேன் என்று சொல்லி அழைத்துச் சென்றார். ஆனால் அவர் திரும்பவில்லை. பின்னர் தேடியும் கிடைக்கவில்லை. அதன் பிறகே போலீசில் புகார் அளித்தோம்,”
என்று கூறியுள்ளார்.
