கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி பிளாக்கதடம் மலைப் பகுதியில் படுகாயங்களுடன் வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த அகில்பாபு என்பது தெரியவந்தது. முன் விரோதத்தால் அகில் பாபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது தாய் துளசியும் தம்பிய அஜித்தும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சகோதரர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டது தெரியவந்தது. அது மட்டுமில்லாமல் அகில் பாபு கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய நாளும் சண்டை நடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் துளசியும் அஜித்தையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். அப்போது இருவரும் முரண்பாடான தகவல்களை கூறியுள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்தி விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

துளசியின் இரண்டு மகன்களுக்கும் அது கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. அகில் பாபு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது துளசியும் அஜித்தும் டிவி பார்த்து கொண்டு இருந்தனர். மது போதையில் வந்து அகில் டிவியை உடைத்து விட்டார். அதே நேரம் அஜித்தும் மது போதையில் இருந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பளப் பணத்தை தாயிடம் கொடுப்பது, வீட்டு செலவை நிர்வகிப்பது பற்றி பேசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

ஒரு கட்டத்தில் அகில் கோபத்தில் தனது தாயை கீழே தள்ளிவிட்டார். இதில் கோபமடைந்த அஜித் தனது அண்ணனை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அகில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயும் மகனும் அகிலின் உடலை 100 மீட்டர் தூரத்திற்கு மேல் இழுத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத தனியார் தோட்டத்தில் கட்டி வைத்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.