மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய்குரி  மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தில் ராம் பிரசாத் தெவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால்  இவரை கடந்த புதன்கிழமை ஜல்பாய்குரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் அடுத்த நாளில் உயிரிழந்தார். இதனையடுத்து அங்கிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு தாயாரின் உடலை எடுத்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.3000 கேட்டுள்ளனர்.

ஆனால் அவரிடம் அவ்வளவு பணம் இல்லாத காரணத்தினால் தனது தோளில் வைத்து சுமந்து கொண்டு சொந்த ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளார். இது குறித்து ராம்பிரசாத் தெவன் கூறியதாவது, “எனது அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததற்கு ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.900 கொடுத்தோம். ஆனால் தற்போது அம்மாவின் உடலை வீட்டுக்கு எடுத்து செல்வதற்காக அவர்கள் ரூ.3,000 கட்டணம் கேட்கின்றனர். எங்களால் அவ்வளவு பணம் கொடுக்க வசதி இல்லை. அதனால் அம்மாவின் உடலை படுக்கை விரிப்பில் சுற்றி என் தோளில் வைத்து சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தேன். என்னை தொடர்ந்து என் அப்பா வந்தார்” என அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.