அதிமுக உட்கட்சி அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்குப் புதிய வெடிகுண்டை தூக்கிப் போட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். தேர்தலில் வலிமையான கூட்டணி அமைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமியிடம் தாங்கள் வைத்த கோரிக்கைகள் எப்படி நிராகரிக்கப்பட்டன என்பதை அவர் வெளிப்படையாகப் போட்டுடைத்துள்ளார்.

​செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வையுங்கள் என்று நாங்கள் அத்தனை பேரும் ஈபிஎஸ்-ஸிடம் சொன்னோம். தவெக தரப்பிலும் எங்களுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், கூட்டணி பேச வந்தவர்களை எடப்பாடி பழனிசாமி முற்றிலும் உதாசீனப்படுத்தினார்; அவர்களை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார்” என்று அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

​மேலும், “தவெக மட்டுமல்ல, தேமுதிக-வைச் சேர்ப்பதற்கும் அவருக்கு மனமில்லை. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியையும் கூட்டணியில் சேர்க்கவில்லை. இப்படி யாரையும் அரவணைக்காமல், தான் மட்டும் இருந்தால் போதும், தனக்கு மட்டும்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற அகங்கார மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இருந்தார்” என மிகக் காரசாரமாகப் பேசியுள்ளார். சி.வி.சண்முகத்தின் இந்த அதிரடிப் பேட்டி தவெக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.