தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அதனை காவல்துறை மறுத்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தற்போது சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த  மக்களுக்கு உதவும் நோக்குடன் தமிழக வெற்றிக் கழகத் பொறுப்பாளர்கள் அத்தியாவசியப் பொருட்களும், உணவும் வழங்கியதை தமிழ்நாடு காவல்துறை தடுத்ததோடு, பெண் நிர்வாகிகள் என்றும் பாராமல் கடுமையாகத் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்ன தேசக்குற்றமா? அதற்காக திமுக அரசு காவல்துறையை ஏவி கடுமையாகத் தாக்கியுள்ளது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.

ஜனநாயக நாட்டில் மக்கள்தானே மன்னர்கள்? அரசியல் என்பதே மக்களுக்கு செய்கின்ற சேவைதானே? அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள்வரை அனைவருமே மக்களுக்குத் தொண்டு செய்யும் சேவகர்கள்தான் எனும்போது மக்களுக்கு உதவிசெய்வதை, அதுவும் எதிர்பாராத விபத்தில் சிக்கி ஆதரவற்று நிற்கும் மக்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்ததைத் தடுத்து நிறுத்தி திமுக அரசின் காவல்துறை தாக்கியது ஏன்?

உண்மையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி இருக்க வேண்டியது நல்ல அரசின் முழுமுதற் கடமையாகும். திமுக அரசு செய்யத்தவறியதை ஓர் அரசியல் இயக்கத்தினர் தாமாக முன்வந்து உதவினார்கள் என்றால் அதைத் தட்டிக்கொடுத்து பாராட்ட வேண்டுமே தவிர, தடுத்துநிறுத்தி,  தாக்குவது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.

பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது என்றால் கூட எங்கள் பெயரை ஒட்டி நாங்கள் மட்டும்தான் செய்ய வேண்டும், நாங்கள் செய்யும்வரை வேறு யாரும் உதவக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை?  இதற்குப் பெயர்தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும் திராவிட மாடலா? இதுதான் திமுக பெற்றுத்தந்த சமூக நீதியா?

திமுக அரசின் இத்தகைய அதிகார அட்டூழியங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்!

ஆகவே, த.வெ.க பெண் நிர்வாகிகளைத் தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமெனவும், மக்களுக்கு உதவுவதைக்கூட தடுத்து, தாக்கும் இதுபோன்ற கொடுமைகள் தொடரா வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் தமிழ்நாட்டு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்