தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை நேரில் சந்திக்க விரும்பி, ஆவடியில் இருந்து வந்த மாற்றுத் திறனாளி பெண் ஒருவர், கட்சி தலைமை அலுவலகத்தின் வாசலில் நீண்ட நேரம் காத்திருந்தும் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பனையூரில் உள்ள வெற்றிக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் விஜய் தலைமையிலேயே முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், தலைவரை நேரில் சந்தித்து மனு வழங்க ஆசைப்பட்ட மாற்றுத் திறனாளி பெண் ஒருவர், அலுவலக வாசலில் நீண்ட நேரம் காத்திருந்தார். ஆனால், பாதுகாப்பு மற்றும் கூட்டம் நடைபெற்று வந்ததால், அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த அந்த பெண், “புடிக்கறதுக்கு ஒரு ஆளா? என்ன தீவிரவாதியா? என்று எரிச்சலுடன் விமர்சித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பாதுகாப்பு பணியாளர்களின் செயல்முறை மீதும் கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது இந்த சம்பவம், மக்கள் மற்றும் ஊடகங்களில் கலந்துரையாடலுக்கு உள்ளாகியுள்ளது.