கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து வருவாய் துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களுக்கு மக்கள் அலையாதவாறு ஆன்லைன்களை அதிகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விமான நிலைய பணிகள் மற்றும் சிப்காட் நில எடுப்பு பணிகளை விரைந்து முடிப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் நிறைய தொழிற்சாலைகள் வரவேண்டும் என்பதால் அதிகாரிகளுக்கு நிலம் எடுக்க முன்னுரிமை கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் புதிதாக 6 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவி தொகை வேண்டும் என்று கேட்டுள்ளனர். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இ சேவை மையம் குறைவாக உள்ள பட்சத்தில் அங்கு தவறுகள் நடந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கேரளா அரசு தமிழகத்தில் சர்வே செய்ய வரும்போது தமிழக அரசின் அனுமதி இல்லாமல் வரக்கூடாது. இது தொடர்பாக கேரள அரசிடம் நாங்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். கோவை மாவட்டத்தில் திறமையான ஆளாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். நில எடுப்பில் பிரச்சினைகள் வந்தாலும் முடிந்தவரை சுமுகமான முறையில் நிலத்தை எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.