கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமியார் வேடத்தில் வந்த ஒரு மர்மநபர், பக்தர்கள் வழிபடும் வெள்ளி வேலை திருடிச் சென்ற அதிர்ச்சிக் காட்சிகள் சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாக போற்றப்படும் இக்கோவிலில் நாளை நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்த போதும், நேற்று மதியம் 12 மணியளவில் சுமார் 2.5 அடி உயரம் கொண்ட, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி வேல் திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு நடந்த இடமான வேல் கோட்டம் தியான மண்டபம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளியின் செயல்கள் பதிவாகியுள்ளன. சம்பவம் குறித்து தகவலறிந்த வடவள்ளி காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய மதத்தலத்தில், பாதுகாப்பு இருந்தும், இப்படியான திருட்டு நிகழ்ந்ததற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“>