சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 2 கோடி மதிப்பிலான கலைஞர் ஆய்வு மைய கட்டுமான பணிகளை அமைச்சர் பொன்முடி நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு அமைச்சர் பொன்முடி விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் வகுப்பு ஒரு பெண் படித்து வந்த காலம் போய் தற்போது 80 சதவீதம் பெண்கள் படிப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான். 14 வயதில் முரசொலி நாளிதழை கலைஞர் ஆரம்பித்தார். கலைஞரின் பேனா தான் இன்றைக்கு நாமெல்லாம் படிப்பதற்கு காரணம். நான் அயலி பார்த்தேன். அதில் தமிழகத்தின் வரலாறே உருவாகி இருக்கிறது.

ஒரு பெண் குழந்தையை படிக்க விடாமல் ஊர் கட்டுப்பாடு விதிக்கும் நிலையில் அந்த கட்டுப்பாடுகளை தகர்த்து பெண் எப்படி படிக்கிறார் என்பதுதான் அயலி கதை. அதுபோன்ற கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்தெறிந்து இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சி தான். மேலும் தமிழ்நாடு என்பதே சிலருக்கு பிடிக்கவில்லை. எனவே மாணவிகள் அனைவரும் படிப்பது மட்டுமின்றி தமிழ்நாட்டின் வரலாற்றையும் சேர்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.