
தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர். மாலை ஆறு மணி ஆகியும் அவர்களை விடுவிக்காததால் காவல்துறையினரிடம் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். அதன் பிறகு வெளியே வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து மிகவும் ஆவேசமாக பேட்டி கொடுத்தார். அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இனி முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை ஆணி அடித்து ஃப்ரேம் போட்டு மாட்டுவோம். இனி மே மாதம் வரை தமிழக போலீசை நாங்கள் தூங்கவே விட மாட்டோம். தேதி சொன்னால்தானே தடுப்பீர்கள் தேதியே சொல்லாமல் போராட்டம் நடத்தினால் என்ன செய்வீங்க என்று ஆவேசமாக பேட்டி கொடுத்தார்.
இதற்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாமலை. அவர் முதல்வரின் போட்டோவை ஆணி அடித்து மாட்ட வேண்டும் என்றால் முதலில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்திற்கு சென்று அங்கு பிரதமர் மோடியின் போட்டோவை தான் பிரேம் செய்து மாட்ட வேண்டும். அதற்கு ஆணி வேண்டுமானாலும் திமுக சார்பில் சப்ளை செய்கிறோம். தமிழக போலீஸ் தூங்காமல் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் எத்தனையோ கொலை மற்றும் கொள்ளை குற்றவாளிகளை துணிச்சலாக பிடித்து இரவு பகல் பாராமல் முதல்வரின் வார்த்தையை காக்க வேலை பார்க்கிறார்கள்.
தமிழக போலீஸ் ஒன்றும் அண்ணாமலையை போன்று டூப் போலீஸ் கிடையாது. எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் நாங்கள் பயப்பட மாட்டோம். இந்த உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயந்து போய் வீட்டில் இருக்க மாட்டோம். முன்பை விட வேகமாக தான் திமுக பயணிக்கும். முதல்வர் வீட்டை முற்றுகையிடுவதற்கான நாளை அண்ணாமலை குறிக்கட்டும். தமிழக போலீஸ் என்ன திமுக கட்சியின் தொண்டனே பாஜகவை தடுப்பார்கள் என்று கூறினார். மேலும் திருச்செந்தூரில் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்த கேள்விக்கு அது இயற்கையான மரணம் என்று பதில் வழங்கினார்.