தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு என்ற பெயர் புதிதாக வந்தது கிடையாது. அது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெயர். இந்திய அரசியலமைப்பில் தமிழ்நாடு தமிழகம் என்ற பெயர்களுக்கு என்ன வித்தியாசம் இருக்கிறது. அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது கூட்டாட்சி ஒற்றை ஆட்சியாக உருவாக்க வேண்டும் என்ற விவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அம்பேத்கர் யூனியன் ஆப் ஸ்டேட் என்பதை கொண்டு வந்தார். ஸ்டேட் என்றால் நாடு. யூனியன் என்றால் ஒன்றியம்.

அதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு என்று கூறுகிறோம். தமிழ்நாடு என்ற கருத்தில் எந்த தவறும் கிடையாது. அதுதான் உண்மையான வார்த்தை. ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை. அவர் பல்வேறு நிகழ்வுகளில் பேசி வருகிறார். தமிழ்நாடு என்பது சரியான கருத்து. அது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கருத்து. மகாராஷ்டிராவில் ராஷ்டிரா என்றால் நாடு என்பது அர்த்தம். அவர் ஏதோ ஒரு எண்ணத்திற்காக ‌ சொல்லி இருக்கிறார். அந்த எண்ணத்தை ஆளுநர் மாற்றிக் கொள்ள வேண்டும். ஜன கன மன கதி என்ற பாடலில் திராவிடம் என்ற வார்த்தை இருக்கிறது. இதனால்தான் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்று கூறி வருகிறார். மேலும் தமிழக அரசு நியமிக்கும் சட்டங்களுக்கு ஆளுநர் முறையாக அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.