மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம், ஜூன் 5, 2025 அன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மே 24, 2025 அன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் பேசும் போதே, கமலுக்காக ஒரு பழைய பாடலை பாடி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இந்த விழாவில் பேசும் போது, கமல்ஹாசன், “சிவராஜ்குமார் என் குடும்பம் போல. அவர் பேசும் மொழியும் தமிழிலிருந்து பிறந்தது” எனக் குறிப்பிட்டார். இந்தக் கருத்து, விழா அரங்கத்தில் சிலரால் வரவேற்கப்பட்டாலும், கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“>

“தமிழிலிருந்து பிறந்த மொழி” என கன்னடத்தை குறைத்துப் பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் கமலுக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்தன. பலரும் இது 6.5 கோடி கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ளனர்.

கமல்ஹாசனின் பேச்சை கண்டித்து, கன்னட ரக்ஷண வேதிகை உள்ளிட்ட பல அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. “தமிழ் கன்னடத்தைவிட சிறந்தது” எனக் கூறுவது முழுமையாக தவறானது எனக் கூறிய அவர்கள், “அத்தகைய கருத்து கூறும் நடிகரின் படங்களை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க கூடாது” என்று எச்சரித்துள்ளனர்.

மேலும், கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, “கன்னடத்தின் 2500 ஆண்டு பாரம்பரியத்தை கேள்விக்குள்ளாக்குவது மிகவும் கவலையளிக்கிறது. கமல், நீங்கள் கன்னடத்தில் நடித்திருந்தாலும், இப்போது நன்றி மறந்து அவமதிக்கிறீர்கள்” என தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“>

 

இந்நிலையில், தக் லைஃப் திரைப்பட வெளியீட்டை கர்நாடகாவில் எதிர்த்து போராட்டங்கள் ஏற்படும் சாத்தியம் உருவாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் மற்றும் தயாரிப்பாளர்கள் இந்த விவகாரம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.