குரேஷியாவில் நடைபெற்று வரும் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஜ் செஸ் தொடரின் 6-ஆவது சுற்றில், தமிழகத்தைச் சேர்ந்த உலக சாம்பியன் டி. குகேஷ் மற்றும் முன்னாள் உலக சாம்பியனும் தற்போது நம்பர் 1 வீரருமான மாக்னஸ் கார்ல்சன் இடையே பரபரப்பான போட்டி நடைபெற்றது. இதில், கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கார்ல்சனை 49-ஆவது நகர்த்தலில் தோற்கடித்து பெரும் பரிசைத் தட்டிக் கேட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற நார்வே செஸ் போட்டியிலும் குகேஷிடம் தோல்வியடைந்திருந்த கார்ல்சன், இப்போது ஒரே மாதத்துக்குள் இரண்டாவது முறையாக தமிழக வீரரிடம் வீழ்த்தப்பட்டுள்ளார். குறிப்பாக, கார்ல்சனே ஒரு நேரத்தில் “குகேஷ் இன்னும் முழுமையாக வலுவடைந்த வீரர் அல்ல” என விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்குப் பிறகு அளித்த பேட்டியில் கார்ல்சன் கூறியதாவது, “தற்போதைக்கு எனக்கு செஸ் விளையாடவே விருப்பமில்லை. விளையாடும்போது சரியான மனநிலை அமையவில்லை. தொடர்ச்சியாக தயக்கம், முடிவெடுக்க முடியாமை என பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் என்னுடைய ஆட்டம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில், குகேஷின் ஆட்டத்தை பாராட்டிய அவர், “குகேஷ் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகிறார். இந்தத் தொடரில் அவர் 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். இது ஒரு நீண்ட தொடர். ஆனால் குகேஷின் பயணத்தில் இது ஒரு முக்கிய வெற்றி” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தின் செஸ் மரபை மேலும் வலுப்படுத்தும் வகையில், குகேஷ் தொடர்ந்து உலக தரத்தில் விளங்குகிறார் என்பது பெருமைக்குரிய செய்தியாக பார்க்கப்படுகிறது.