தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பமாகும். அந்த வகையில் இன்று முதல் தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இந்த கத்திரி வெயிலின் தாக்கம் மே 28ஆம் தேதி வரை இருக்கும். மொத்தம் 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருக்கும் என்பதால் இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்து காணப்படும்.

எனவே பொதுமக்கள் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரையில் அநாவசியமாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த நேரத்தில் வெளியே வரக்கூடாது. கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதால் இனி வெயில் வாட்டி வதைக்கும் என்பதில் ஐயமில்லை.

அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் சில இடங்களில் மழை பெய்வது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மே 6-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதால் மக்கள் கவலையில் இருக்கிறார்கள்.