தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, அவையினர் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர், கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கான இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், கேரள முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து முன்னாள் ஆளுநர் இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் பீலா வெங்கடேசன் ஆகியோரின் மறைவுகளுக்கும் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி. கே. அமுல் கந்தசாமி (அ.தி.மு.க.) அவர்களின் மறைவுக்கான இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மவுன அஞ்சலி செலுத்தியதன் பின்னர், சபாநாயகர் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

இன்று (புதன்கிழமை) சட்டசபை கூட்டத்தின் இரண்டாம் நாள் நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து அவைக்கு வருகை தந்துள்ளனர். கரூர் துயரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளைச் சார்ந்த கேள்விகளை எழுப்பி பேசினர். கேள்வி நேரம் முடிந்த பின்னர், 2025–2026ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டு, அதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது.