கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிக்காலமானது கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தகைய திட்டம் இல்லை என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒப்பந்த செவிலியர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மாவட்ட சுகாதார மையம் மூலம் 3,949 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் எத்தனை மாதங்கள் பணியாற்றியுள்ளனர் என்பதன் அடிப்படையில் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு இந்த முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் கூறினார்.