தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் சமீபத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதேசமயம் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் ஜனவரி 10 முதல் ஜனவரி 14 வரை மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதிகளில் அதிக கூட்டம் காரணமாகவும் வெளியூர் செல்ல வேண்டிய காரணமாகவும் 25 சதவீதத்திற்கும் மேலானவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறவில்லை.

அதன் பிறகு ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க சென்றபோது ரேஷன் கடை ஊழியர்கள் பரிசுத்தொகுப்பை வாங்காதவர்களின் விவரங்கள் மற்றும் மீதம் உள்ள பொருள்கள் படமுடன் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளனர். இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் வரை தொடர்ந்து வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.