
தமிழகத்தில் சமீப காலமாகவே தக்காளி மற்றும் வெங்காயம் விலை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. அதாவது மழைக்காலம் என்பதால் வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தக்காளி ஒரு கிலோ 120 ரூபாய் வரையிலும், வெங்காயம் கிலோ 80 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசாங்கம் பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி மற்றும் வெங்காயத்தை விற்பனை செய்கிறது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயத்தை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு தேவை அதிகரிக்கும் என்பதால் அரசு மொத்தமாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ஏற்ற விலைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்பதால் தக்காளி மற்றும் வெங்காயம் ரேஷன் கடைகளில் விற்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.