தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொது மற்றும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்ட பொருள்கள் குறிப்பிட்ட எடை அளவில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் மளிகை பொருட்கள், மாவு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய பொருட்களை விற்பதற்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை தேவைக்கு ஏற்ப யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் ஒரு சில ரேஷன் கடைகளில் அனுமதி வழங்கப்படாத பொருட்களை கட்டுப்பாடற்ற பிரிவில் விற்பனை செய்து வருவதாகவும் அவை காலாவதி தேதியை முடிந்திருப்பதுடன் தரமற்ற இருப்பதாகவும் பல புகார்கள் எழுந்து உள்ளன. எனவே ரேஷன் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் ஊழியர்களிடம் பெறப்படும் தேவைப்பட்டியலின் அடிப்படையில் மட்டுமே கட்டுப்பாலற்ற பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும்.

தேவைக்கு அதிகமான பொருட்களை அனுப்பி பொருட்கள் தேக்கமடைந்து ரேஷன் ஊழியர் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதிச் சுமை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். தரமான பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கட்டுப்பாடற்ற பொருட்களை வாங்குமாறு மக்களை கட்டாயப்படுத்த கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.