தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் எப்எம் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி திறந்தவெளியில் பணியாற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் அனைவரும் தங்களின் பணியை காலையில் முன்கூட்டியே தொடங்க வேண்டும்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் போதுமான குடிநீர், ஓ ஆர் எஸ் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல் இருப்பு, நிழல் கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஆகியவை செய்து தர சம்பந்தப்பட்ட துறைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், சந்தைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதுமான குடிநீர் வசதி, நிழல் கூடங்கள், அவசர மருத்துவ வசதி ஆகியவை செய்திருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரையும் வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க போதுமான விழிப்புணர்வு பணிகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.