அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கடந்த 2006-ம் வருடம் உத்தரவிட்டது. எனினும் தனியார் பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாக்க மறுத்து காலம் தாழ்த்தி வந்த சூழலில், கடந்த 2015-ம் வருடம் 1-ஆம் வகுப்பு முதல் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கி மீண்டும் அரசு உத்தரவிட்டிருந்தது. அதோடு இதுபற்றி 2015-ம் வருடம் 1ம் வகுப்பு சேரும் மாணவர்கள் ஆண்டு ரீதியாக தமிழ் பாடத்தை கற்றுவர வேண்டும் என்ற ரீதியில் அந்த உத்தரவானது வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மாணவர்கள் 10-ம் வகுப்பை எட்டிள்ள நிலையில் நடப்பு ஆண்டு கண்டிப்பாக பொதுத்தேர்வில் அனைத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை எழுதவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் நாகராஜன் வெளியிட்டிருக்கும் உத்தரவில், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் கல்வி முறையில் பயிலும் மாணவர்கள் உட்பட அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் பாடம் கற்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் வாயிலாக 2023-24 சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்துவகை கல்வி முறையிலும் பயின்று வரும் மாணவர்களும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் தேர்வை கட்டாயம் எழுதவேண்டும்.