தமிழகத்தில் சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் விடுதி வளாகத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அரசாணையின்படி விடுதி வளாகத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பணியாளர்கள் தங்க அனுமதி இல்லை எனவும் உணவு சமைத்து கொள்வதற்கு அனுமதி இல்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கத்தை ஒட்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு விடுதி ஒன்றை இயங்கி வருகிறது. அதில் சென்னைக்கு வரும் உறுப்பினர்கள் தங்கிக் கொள்ளலாம்.

முன்னாள் உறுப்பினர்களுக்காகவும் தனியாக விடுதி செயல்படுகிறது. அதில் ஒரு நாளைக்கு 300 ரூபாய் வாடகை வசூல் செய்யப்படுகிறது. அதனைப் போலவே முன்னாள் உறுப்பினர்கள் ஒரு மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே விடுதியில் தங்க முடியும். ஏதாவது அரசு விழாக்களுக்கு முன்னாள் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தால் அவர்கள் இரண்டு நாள் வரை விடுதியில் கட்டணம் இல்லாமல் தங்கலாம். மேலும் விடுதி கட்டணங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.