தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இதேபோன்று 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் அவர் அறிவித்த நிலையில் தற்போது தான் மாணவர்களின் மதிப்பெண்கள் விவரம் வெளிவந்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.digilocker.gov.in, www.tnresults.nic in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல்களை மதியம் 2 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். அதன் பிறகு தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.9% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இதில் மாணவிகள் 95.13 சதவீதமும், மாணவர்கள் 88.70 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 41 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில், ஆங்கிலத்தில் 39 மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 390 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 593 மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 91 மாணவர்களும், கணிதத்தில் 1338 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

அதன்பிறகு அரியலூர் மாவட்டம் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்த மாவட்டத்தில் 97.76% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 96.97% தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 96.23 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்திலும், 95.77 % கோவை மாவட்டம் நான்காம் இடத்திலும், 95.7% தூத்துக்குடி ஐந்தாம் இடத்திலும் இருக்கிறது.