தமிழகத்தில் மழைக்காலம் வந்துவிட்டால் வெள்ள நீர் அதிகரித்து பாதிக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு பேரிடர் மேலாண்மை திட்ட அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 3,916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 719 இடங்கள் அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும், 1086 இடங்கள் மிதமான பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மூன்று அடி முதல் ஐந்து அடி வரையும் மிதமான பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இரண்டு அடி முதல் மூன்று அடி வரையும்,குறைவான பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இரண்டு அடிக்கும் குறைவாக வெள்ளநீர் தேங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 317 இடங்கள் மிக அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அதிலும் மழைக்காலம் என்றால் ஐந்து அடிக்கு மேல் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 389 இடங்களும், சென்னையில் 332 இடங்களும், கடலூரில் 293 இடங்களும், நீலகிரியில் 284 இடங்களும், மயிலாடுதுறையில் 228 இடங்களும் வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.