
தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அதாவது விடுமுறை தினம் என்பதால் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதோடு பல இடங்களுக்கும் செல்கிறார்கள். பொதுவாக விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்யும் நிலையில் பலர் பேருந்திலும் பயணம் செய்வார்கள்.
பொதுவாக விடுமுறை தினங்களில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும் ஆம்னி பேருந்துகளில் தேவைகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்த மாதிரி சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. தமிழக அரசும் ஒவ்வொரு முறையும் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்ற எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு தான் வருகிறது. இருப்பினும் இது குறித்த புகார்கள் எழுந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் தற்போது கோடை விடுமுறைக்கு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது நேற்று சனிக்கிழமை சென்னையிலிருந்து தென்காசி, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு 200 முதல் 500 ரூபாய் வரையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதே போன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கண்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர 500 முதல் 700 ரூபாய் வரையில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கட்டண உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.