சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை நடைபெற்று வருகிறது எனவும் அதனை 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஒழித்து விட்டு கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் எனவும் கூறினார். இதன் காரணமாக கட்சி நலனுக்கு எதிராக அவர் பேசியதாக கூறி  திருமாவளவன் 6 மாத காலம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தற்போது சவுக்கு சங்கர் தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது திருமாவளவன் கூட்டணி ஆட்சி குறித்து பேசியுள்ளார். அதாவது தமிழ்நாட்டில் இதுவரை காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக என்ற மூன்று கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்துள்ளது.

இது தனிநபர் ஆட்சி முறைதான். மன்னராட்சி முறை என்று  இதனை கூறலாம் என்றார். அப்போது தொகுப்பாளர் காமராஜர் ஆட்சி காலத்தையும் மன்னராட்சி முறை என்று கூறுகிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர் காமராஜர் ஆட்சி முறை என்பது ஒரு தவிர்க்க முடியாதது. இருப்பினும் தமிழ்நாட்டில் இதுவரை தனியாக மட்டும் தான் கட்சிகள் ஆட்சி செய்துள்ளதாகவும் இந்த தனிநபர் ஆட்சி முறையே மன்னராட்சி முறை தான் என்றும் கூறினார். அதோடு தமிழ்நாட்டில் கூட்டாட்சி முறை அமைய வேண்டும் எனவும் கூட்டணி கட்சிகள் எல்லாம் இணைந்து ஆட்சி செய்ய வேண்டும் எனவும் இதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவை வெளியிட்ட சவுக்கு சங்கர் இதைத்தான் ஆதவ் அர்ஜுனாவும் கூறினார் என்று பதிவிட்டுள்ளார்.