மக்கள் நலனை முன்னிறுத்தி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த திட்டத்தின் முதல் முகாம் ஜூலை 15ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த பெருந்திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், நகர்ப்புறங்களில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் சார்ந்த 46 சேவைகள் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்கப்படும்:
முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு நேரடியாக தகவல்களை வழங்க தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பக் கட்டாயங்கள், முகாம் நடைபெறும் தேதி, இடம் மற்றும் அரசுத்திட்டங்கள் பற்றிய விளக்கக் கையேடுகளை வழங்குவார்கள். இந்த பணிகள் வரும் திங்கட்கிழமை (ஜூலை 8) முதல் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை – விட்டுபோனவர்களுக்கு புதிய வாய்ப்பு:
முன்னதாக மகளிர் உரிமைத் தொகை பெற தவறிய தகுதியுள்ள பெண்கள், இந்த முகாம்களில் புதிய விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மட்டும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என அரசு தகவல் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பிக்கும் போது பின்வரும் ஆவணங்களை கொண்டு வர வேண்டும்:

ரேஷன் கார்டு

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

ஆதார் கார்டு

நூறு நாள் வேலைவாய்ப்பு அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை

குடும்பத் தலைவியின் பெயரில் இருக்கும் வங்கி பாஸ்புக்

மொபைல் எண்

முக்கியக் குறிப்பு:
வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களை இணைக்கத் தேவையில்லை.
ஒரே குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தால், ஒருவரை தேர்வு செய்து ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மக்கள் நல திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள், பல்வேறு அரசுத்துறை சேவைகளை ஒரே இடத்தில் பெறக்கூடிய மிக முக்கியமான வாய்ப்பாக அமைகின்றது. இதில் பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று பயன்பெறுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.