தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுதுறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் மூலமாக தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த போட்டி தேர்வில் பங்கேற்க போதிய பயிற்சி பெறுவது அவசியம். இதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்த மாணவர்கள் பொருளாதார ரீதியாக சிரமப்படுகின்றனர்.

இதனை கருதி மேற்கண்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் நகர்ப்புறங்களில் தங்கி தனியார் பயிற்சி மையங்களில் ஐஏஎஸ்,ஐபிஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கு பயிற்சி பெற ஐம்பதாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. அதனைப் போலவே டிஎன்பிஎஸ்சி தேர்வில் முதல் நிலை தேர்ச்சி பெற்ற முதன்மை தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கும் 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.