சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நேற்று சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்த நவீன காலத்தில் கணினி மூலமாக சைபர் குற்றங்கள் நடைபெறுகிறது. இந்த சைபர் குற்றங்களை தடுப்பதற்கு நம்மிடம் போதுமான அளவு கணினி பொறியாளர்கள் இல்லை. எனவே மாணவர்கள் அனைவரும் கணினி சம்பந்தமான பாடத்திட்டங்களை எடுத்து படிக்க வேண்டும்.

கணினி சம்பந்தமான பாடங்களை எடுத்து படித்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதோடு சைபர் குற்றங்களையும் நம்மால் தடுக்க முடியும்.‌ அதன் பிறகு உங்கள் செல்போனுக்கு யாராவது ஒரு லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்ய சொன்னால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். அதை ஆபத்து என்று புரிந்து கொண்டு அந்த லிங்கை தொடக்கூடாது. காவல் உதவி என்ற செயலியை தமிழ்நாடு காவல்துறை செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த செயலியில் அவசர காலங்களில் பயன்படுத்தும் 66 விதமான வசதிகள் இருக்கிறது என்று கூறினார்.