இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக அண்மையில் 5g சேவை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் 1GBPS வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும். இதனைத் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதல் கட்டமாக குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் இந்த 5g சேவையை தொடங்கியது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் மக்களுக்கு 5G சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகர்கோவில், கும்பகோணம், கரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல் மற்றும் கடலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது ஜியோ பயனர்களுக்கு jio true 5G ஐ பயன்படுத்த jio 5G welcome offer வழங்கப்படுகின்றது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் நாடு முழுவதும் 5G வழங்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.