தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் டிசம்பர் 4ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று திருவள்ளூர், கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை,  புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல நாளை மறுநாள் (30ஆம் தேதி) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை,  புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் டிசம்பர் 1ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் டிசம்பர் 4ஆம் தேதிவரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறைக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.

அதேபோல சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னல்களுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நாளைய தினம் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கக்கூடிய நிலையில், வருகின்ற 30-ஆம் தேதி தென்கிழங்கு வங்கக்கடல் பகுதியில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்றும், அதனை தொடர்ந்து, அதற்கு அடுத்த 48  மணி நேரத்தில் டிசம்பர் 2ம் தேதி வாக்கில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அது புயலாக வலுப்பெற கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் உருவாகக்கூடிய பட்சத்தில் அந்த வங்க கடல் குறிப்பிட்ட வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 29ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் வளிமண்டல சுழற்சி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கக்கூடிய நிலையில், அதேபோல தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடிய நிலையிலும் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.