கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் எல்.ஐ.சி காலனியில் கிருதிக் ஆதித்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருதிக் ஆதித்யா செல்வபுரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எல்.ஐ.சி காலனியில் இ- சேவை மையம் நடத்தி வரும் சத்யராஜ் என்பவர் எங்களது மருத்துவமனை பெயரில் போலியான இறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளார். எங்கள் மருத்துவமனையின் தலைமை டாக்டர் பெயரில் போலியான முத்திரைகளையும், கையெழுத்துகளையும் பயன்படுத்தி அவர் சான்றிதழ் வழங்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சத்யராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, தனியார் இ-சேவை மைய உரிமையாளர் சத்யராஜ் தனியார் மருத்துவமனை தலைமை டாக்டரின் பெயரில் போலியான முத்திரை தயாரித்து கையொப்பமிட்டு போலியான இறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளார். அதனை வாங்கிக் கொண்ட ஒருவர் அதில் இருக்கும் முகவரியை மாற்றுவதற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது அது போலியாக தயாரித்தது என்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் சத்யராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தனர்.