
அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மகள் லாராவும்(20), மனைவியும் நேற்று வேதிய ராஜை பார்ப்பதற்காக வந்தனர்.
இருவரும் இரவு மருத்துவமனையிலேயே தங்கினர். அதிகாலை லாராவும் அவரது தாயும் கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறினர். கழிப்பறைக்கு சென்ற லாரா பிரசவ வலியால் துடித்து, தனக்கு தானே பிரசவம் பார்த்து சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.
கழிப்பறைக்கு வெளியே அவரது தாய் நின்று கொண்டிருந்தார். அப்போது லாரா பிறந்த உடனே குழந்தையை கழிப்பறைக்குள் அமுக்கி திணித்தார். குழந்தையின் உடல் முழுவதும் கழிப்பறைக்குள் சென்றுவிட கால்கள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
அந்த சமயம் தூய்மை பணியாளர்கள் வந்ததால் லாராவும், அவரது தாயும் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் கழிப்பறைக்குள் சென்று பார்த்த தூய்மை பணியாளர் குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தப்பி ஓட முயன்ற லாராவை பிடித்து பிரசவ வார்ட்டில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் லாரா மற்றும் அவருக்கு உடனடியாக இருந்த தாய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.