தகாத வார்த்தைகளால் விமர்சித்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தொண்டருக்குப் பதிலளித்த ‘தி லீடர்ஸ்’ அமைப்பின் தன்னார்வலர் மீது காவல்துறை வழக்குப் பதிந்துள்ள சம்பவத்திற்கு, அண்ணாமலை தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, “ஆளுங்கட்சியான தவெகவின் தொண்டர் ஒருவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்த நிலையில், அதற்கு நியாயமான முறையில் பதிலளித்த ‘தி லீடர்ஸ்’ தன்னார்வலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர், “ஆளுங்கட்சியையும் அதன் தொண்டர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும், அதிகாரத்தையும் காவல்துறையையும் பயன்படுத்தி வழக்கு மற்றும் கைது நடவடிக்கை மூலமாக அடக்கி ஒடுக்கப் பார்க்கிறீர்களா?” என்று தவெக அரசுக்குச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
”இந்த நடவடிக்கை, திமுகவின் அதே சர்வாதிகாரப் பாதையிலேயே தவெக அரசும் பயணிக்கிறதோ என்ற பெரும் அச்சத்தையும் சந்தேகத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, ஜனநாயக நாட்டில் எதிர்க் குரல்களை முடக்கும் இத்தகைய அடக்குமுறைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அண்ணாமலையின் இந்த அதிரடிக் கண்டன அறிக்கை தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
