டெல்லியில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவான ஆம் ஆத்மி தோல்வியை சந்தித்துள்ள நிலையில் காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஒற்றுமை இல்லாமல்டெல்லி தேர்தலை சந்தித்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது. பல இடங்களில் ஆம் ஆத்மி நிர்வாகிகள் சொற்ப வாக்குகளில் தோல்வியை சந்தித்தார்கள். ஒருவேளை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு இருந்தால் அந்த வாக்குகள் பிரிந்து போய் இருக்காது. மீண்டும் டெல்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கலாம் என்பதே இந்தியா கூட்டணியில் இருக்கும் பல அரசியல் தலைவர்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் டெபாசிட் இழந்ததன் மூலம் ராகுல் காந்தி தலைவராகவே இருக்க தகுதி இல்லாதவர் என்பது  நிரூபணம் ஆகிவிட்டதாக தற்போது பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, ராகுல் காந்தி எப்படிப்பட்ட தலைவர் என்பது பல்வேறு தேர்தல்களின் மூலம் நிரூபணம் ஆகி விட்டது. காங்கிரஸ் ஒரு தேசிய கட்சியாக இருக்கும் நிலையில் ராகுல் காந்திக்கும் தேசியத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா.?முற்றிலும் தேசவிரோத கருத்துகளை கூறக்கூடிய ஒரு தலைவராக தான் காங்கிரஸ் கட்சியில் அவர் இருக்கிறார். தன்னுடைய கட்சியின் சித்தாந்தமே தெரியாத ஒரு தலைவர் அந்த கட்சியில் இருப்பது துரதிஷ்டவசமானது. மேலும் அதனால் தான் காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை என்பது வரவில்லை என்றார்.