தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய ஆட்சியை எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தேர்தலில் எந்த ஒரு தனி கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலைப் பயன்படுத்தி, திமுக மற்றும் அதிமுக இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைக்க ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளியான தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய அரசியல் சூழலுக்கு மத்தியில், மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
NEET தாள் கசிவில் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதறுகிறது…
4வது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்து சாமானிய மக்கள் தினமும் சுமையடிக்கிறார்கள்…
ஆனா நம்ம “எப்போதும் பேசுவோம்” தலைவர்கள் மட்டும் Deep Silence Mode-ல! 🤐
திரு.உதயநிதி ஸ்டாலின்…
திரு.பழனிசாமி…ஒருத்தராவது ஒரு… pic.twitter.com/eZX8QtaNJO
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) May 26, 2026
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகள் சிதைந்துள்ள நிலையிலும், 4-ஆவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு சாமானிய மக்கள் தினசரி சுமையைச் சுமக்கும் போதும், “எப்போதும் பேசுவோம்” என மார்தட்டும் தலைவர்கள் மட்டும் தற்போது ‘டீப் சைலன்ஸ் மோடுக்கு’ சென்றுவிட்டதாகச் சாடியுள்ளார். மேலும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மக்கள் பிரச்சினை என்று வரும்போது மவுனம் காப்பதும், அரசியல் என்று வந்தால் மைக் பிடிக்கப் போட்டியிடுவதும் ஏன் என்று சாடியுள்ள அவர், இந்த அமைதிக்கு என்ன காரணம் அல்லது “மேலிருந்து” பேசக்கூடாது என்று ஏதேனும் ‘குரூப் கால் ஆர்டர்’ வந்துவிட்டதா என்று தமிழக மக்கள் கேட்பதாகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
