இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டை என்பது தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமான ஒரு ஆவணமாக மாறி உள்ளது. இதனால் ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண் பான் கார்டு எண், ரேஷன் கார்டு மற்றும் மின் கட்டண பில் ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் அங்கீகார பரிவர்த்தனைகள் மார்ச் மாதத்தில் 2.31 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது நாட்டில் மின்னணு பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆதார் பயன்பாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. ஆதார் அடிப்படையிலான மின்னணு நுகர்வோர் சேவை வங்கி மற்றும் வங்கி சாரா நிதி சேவைகளில் முக்கிய பங்கு வகிப்பதால் இது வெளிப்படை தன்மையை அதிகரித்து வாடிக்கையாளர்களின் நலனை மேம்படுத்தி எளிதாக வர்த்தகம் புரிவதற்கு உதவுகிறது. ஆதார் அங்கீகாரம் என்பது நிதி பரிவர்த்தனைகளில் நம்பகத்தன்மை மற்றும் பரிவர்த்தனைகளை கண்காணிக்க உதவுகிறது. மேலும் இதனால் ஆதார் அங்கீகாரம் பெற்ற பரிவர்த்தனைகள் அதிகமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.