
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியானது தன்னுடைய முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியானது துபாயில் நடைபெறும். துபாய் பிட்ச் எப்போதுமே இந்திய அணிக்கு ராசியான மைதானம் தான். இங்கு ஆறு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடி உள்ளது. இதில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியை சந்தித்தது இல்லை. ஒரு போட்டியில் மட்டுமே டை செய்துள்ளது. 2015 ஆம் வருடத்திற்கு பிறகு ஐசிசி லீக் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வருவதும் நல்ல விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. 2015 ஆம் வருடத்திற்கு பிறகு 35 ஐசிசி லீக் போட்டிகளில் மூன்று லீக் போட்டிகளில் மட்டுமே இந்திய அணியானது தோல்வியை தழுவியது.
தற்போது இந்திய அணி சரியான ஃபார்மில் இருப்பதால் சாம்பியன்ஸ் டிராபியில் போட்டியில் அபாரமாக செயல்பட்டு அரை இறுதிக்கு முன்னேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணியானது டாசை இழந்துள்ளது. இதன் மூலமாக இந்திய அணி ஒரு மோசமான வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. அதாவது ஒரு நாள் உலக கோப்பை 2023 தொடருக்கு பிறகு இந்திய அணி ஒரு முறை கூட டாசை வெல்லவில்லை. ஒரு நாள் உலக கோப்பை 2023 தொடருக்கு பிறகு இந்திய அணி 11 போட்டியில் விளையாடி உள்ளது. இதில் 11 முறையும் இந்தியா டாசை இழந்து ஒரு மோசமான வரலாற்று சாதனை படைத்துள்ளது .