தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான யஷ் நடிக்கும் புதிய திரைப்படமான ‘டாக்சிக்’ படத்தின் முன்னோட்ட விழா ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழகத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆனால், இந்த மகிழ்ச்சியான கொண்டாட்டம் ஒரு எதிர்பாராத விபத்தால் பதற்றமாக மாறியுள்ளது.
விழாவில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது சில உற்சாகமான மாணவர்கள், சவுண்ட் பாக்ஸ்களைத் தாங்கிப் பிடிக்கும் இரும்புப் பாலங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஏறி நின்று ஆரவாரம் செய்துள்ளனர். எதிர்பாராதவிதமாக அந்தப் பாரம் தாங்காமல் கனரக சவுண்ட் பாக்ஸ் செட்டப் திடீரென கீழே சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர், மேலும் ஒரு பெண் பயத்தில் மயங்கிச் சரிந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அந்த இடமே சிறிது நேரம் பெரும் குழப்பமும் கூச்சலுமாக மாறியது.
हैदराबाद : ‘टॉक्सिक’ फिल्म के प्री-रिलीज इवेंट के दौरान हुआ हादसा
◆ साउंड और लाइटिंग का एक बड़ा सेटअप गिरने से हुआ हादसा
◆ मल्ला रेड्डी यूनिवर्सिटी में हो रहा था इवेंट
◆ घटना में दो छात्रों के घायल होने की खबर है
◆ हादसे के दौरान यश मंच पर स्पीच दे रहे थे, जिसके चलते… pic.twitter.com/8ks3krH18j
— News24 (@news24tvchannel) August 23, 2026
இந்தச் சம்பவம் நடக்கும்போது நடிகர் யஷ் மேடையில் நின்று ரசிகர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். திடீரென சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த அவர், நிலைமையைப் புரிந்து உடனடியாகப் பேச்சை பாதியில் நிறுத்தினார். உடனே மைக்கில், “அரே, கொஞ்சம் கவனமா இருங்க… அங்கு எல்லாம் சரிதானே? சார், தயவுசெய்து என்னவென்று பாருங்கள். மாணவர்களே, தயவுசெய்து உங்களைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பதற்றத்துடன் கூறினார். காயமடைந்த மாணவர்களின் உடல்நிலை குறித்தும் உடனே விசாரித்தார்.
பெரிய நட்சத்திரங்களின் திரைப்படக் கொண்டாட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் நிலவும் மெத்தனப்போக்கு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 2024 டிசம்பரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற புஷ்பா 2 பட விழாவின்போதும் இதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
