சென்னை மாவட்டத்தில் உள்ள கோட்டூர்புரத்தில் வசிக்கும் பெண் டாக்டர் மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தந்தை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. எனக்கு திருமணம் ஆகி கணவரும், 13 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் ஒருவர் தவறான நோக்கத்துடன் எனது அழகை வர்ணித்து தகவல் அனுப்பி வந்தார். அவரை நான் கண்டித்து வாட்ஸ் அப் இணைப்பையும் துண்டித்தேன். அதன் பிறகும் அந்த நபர் செல்போன் மூலம் என்னை தொடர்பு கொண்டு தவறான நோக்கத்துடன் பேசி பாலியல் தொந்தரவு அளிக்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் பெண் டாக்டருக்கு தொந்தரவு கொடுத்த நபர் சென்னை பம்மலை சேர்ந்த பன்னீர்செல்வம்(38) என்பது தெரியவந்தது. இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக இருந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பன்னீர்செல்வம் கூறியதாவது, மருந்து மாத்திரை சப்ளை செய்வதற்காக கிளினிக் இருக்கு சென்றபோது பெண் டாக்டரின் அழகில் மயங்கினேன். நேரில் பேச பயந்து செல்போனில் தகவல் அனுப்பினேன் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.