ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு அவரது ஒன்றுவிட்ட சகோதரர் வாசுதேவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு, கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் இந்து வாரிசு உரிமை சட்டத்தின் படி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவித்து தீர்ப்பளித்தார்கள்.

இதையடுத்து அந்த போயஸ்கார்டன் இல்ல சொத்துக்கள் தீபா – தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூர் வியாசர்புராவை சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒன்றுவிட்ட சகோதரர் தான் என்றும், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியின் உடைய மகன் என்றும் தெரிவித்துள்ளார்.. இந்த வழக்கை தான் 2021 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், அதில் சில பிழைகள் காரணமாக மனு திருப்பி அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்..

கொரோனா ஊரடங்கு, தனக்கு உடல் நோய் காரணமாக வழக்கு தாக்கல் செய்ய காலதாமதம் ஏற்பட்டதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமன் உடைய முதல் மனைவியான ஜெயம்மா மகன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன் தந்தை ஜெயராமன் இரண்டாவது மனைவியாகத் தான்  வேதவல்லி என்கிற வேதம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டார்.

இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்தான் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா என்று தெரிவித்துள்ள அவர்,  ஜெயக்குமாரின் வாரிசுகள் தான் தீபா, தீபக் என சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 1950ஆம் ஆண்டு ஜெயராமானிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் தனது தாய் தாக்கல் செய்த வழக்கில் அப்போதே ஜெயக்குமார் ஜெயலலிதாவை பிரதிவாதிகளாக சேர்த்ததையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்து வாரிசு உரிமை சட்டத்தின் படி ஜெயலலிதாவின் சொத்துக்களில் தனக்கும் பங்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மனு காலதாமதமாக தாக்கப்பட்டுள்ளதால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த கால தாமதமாக 2 ஆண்டுகளுக்கு மேல் காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட காரணமாக ஒரு நிர்வாக உத்தரவுக்காக இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த மாஸ்டர் நீதிமன்றம் (உயர்நீதிமன்ற கிளை) இதுகுறித்து தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.