சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச்  சின்னம் அமைய இருக்கிறது. இந்த நினைவுச் சின்னத்தை மக்கள் அடைவதற்காக கலைஞர் நினைவிடத்தில் இருந்து கடலுக்குள் அமையும் பேனா நினைவு சின்னம் வரை உயர்மட்ட பாலம் கட்டப்பட இருக்கிறது. இதற்கு கடலோர மண்டல மேலாண்மை அனுமதி கொடுத்துள்ள நிலையில், மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் ‌ காலநிலை மாற்றத்துறை தமிழக பொதுப்பணித்துறைக்கு கடந்த டிசம்பர் 30-ம் தேதி கடிதம் எழுதி அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, பேனா நினைவுச்சின்னம் கட்டமைப்புக்கான மாநில அரசின் வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, பேரிடர் மேலாண்மை திட்டத்துடன் கூடிய இடர் மதிப்பீட்டு அறிக்கை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு கருத்துக்கணிப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி கடலுக்குள் அமைக்கப்படும் பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. அதோடு கடலுக்குள் அமையும் பேனா நினைவுச்சின்னத்தை பொதுமக்கள் அடைய கலைஞரின் நினைவிடத்திலிருந்து 650 மீட்டர் தொலைவில் கண்ணாடி தரையுடன் கூடிய பாலம் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி இன்று கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது திடீரென ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கலைவாணர் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது ‌