சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச்  சின்னம் அமைய இருக்கிறது. இந்த நினைவுச் சின்னத்தை மக்கள் அடைவதற்காக கலைஞர் நினைவிடத்தில் இருந்து கடலுக்குள் அமையும் பேனா நினைவு சின்னம் வரை உயர்மட்ட பாலம் கட்டப்பட இருக்கிறது.

இதற்கு கடலோர மண்டல மேலாண்மை அனுமதி கொடுத்துள்ள நிலையில், மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் ‌ காலநிலை மாற்றத்துறை தமிழக பொதுப்பணித்துறைக்கு கடந்த டிசம்பர் 30-ம் தேதி கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அதில் ஜனவரி 31-ஆம் தேதி கடலுக்குள் பேனா நினைவு சின்னம் வைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின்படி இன்று கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது திடீரென ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கலைவாணர் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேனா நினைவு சின்னத்தை வைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் கலந்து கொண்டார்.

அவர் சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு பேனா நினைவு சின்னத்தை வைத்தால் அதை உடைப்பேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார். அதன் பிறகு அரசு பள்ளிகளை சீரமைக்க நிதி இல்லாத இந்த அரசிடம் பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு மட்டும் நிதி இருக்குமா என்று கேள்வி எழுப்பிய சீமான், அண்ணா அறிவாலயத்தில் வேண்டுமானால் பேனா நினைவுச் சின்னத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் கலைவாணர் அருகில் தொடர் பதற்றம் எழுதுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.