கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் மதன்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் பிஎஸ்சி முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்த நிலையில், செல்போனில் அடிக்கடி வீடியோ கேம் விளையாடி உள்ளார். இதன் காரணமாக மதன்குமாருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலி மற்றும் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த மதன் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக போத்தனூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மதன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் செல்போனில் வீடியோ கேம் விளையாடி பார்வை குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக ஒரு வாலிபர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.