
இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. பிரதானமாக, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் நேரடியாக மோதல் நிலைக்கு வந்துள்ளன. மத்திய அரசு, இந்த அலைவரிசை ஏலம் முறையில் வழங்கப்படாது என அறிவித்துள்ளது. இது, இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும், செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்க விரும்பும் நிறுவனங்களுக்கும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அலைவரிசை உரிமம், உலகளவில் நிர்வாகரீதியாக ஒதுக்கீடு செய்யப்படும் நடைமுறையை மீறுவதற்கு, இந்திய அரசு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. மஸ்க் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜியோ நிறுவனத்தின் அழுத்தம் காரணமாகவே இது நிகழ்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் (TRAI) புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற இந்திய நிறுவனங்கள், செயற்கைக்கோள் இணைய நிறுவனங்களும் அதே விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன. இதற்கிடையில், மத்திய தொலைத்தொடர்பு துறை, ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. இந்த நிலையில்தான், ’இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏலம் முறையில் நடைபெறாது’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.