பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் புதிய கதாபாத்திரங்கள் குறித்து தொடர் அறிவிப்புகளை பட குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர்கள் மோகன்லால் மற்றும் சுனில் ஆகியோர் படத்தில் இணைந்துள்ளதாக பட குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தில் தமன்னா இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது தமன்னா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெயிலர்  திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.